கருப்பு பணம் மாற்றம், நிதி முறைகேடு புகார்கள் போலி நிறுவன இயக்குநர்கள் மீது கண்காணிப்பு தீவிரம்

புதுடெல்லி:  கருப்பு பணத்தை மீ்ட்டும் நடவடிக்கையாக பழைய 500, 1,000 செல்லாது என அறிவித்த மத்திய அரசு, இவற்றை வங்கிகளில் மாற்ற 50 நாள் அவகாசம் அளித்தது. இந்த காலக்கட்டத்தில் வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட உயர் மதிப்பிலான டெபாசிட்கள் கண்காணிக்கப்பட்டன. இதில் திரட்டிய தகவல்களை வைத்து வருமான வரித்துறை மற்றும் வருவாய் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.இதற்கிடையில், 2,138 போலி நிறுவன கணக்குகளில் மொத்தம் 1,321 கோடி டெபாசிட் செய்யப்பட்டது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவன பதிவுகளை கம்பெனிகள் சட்டப்படி மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. அதோடு இந்த நிறுவன இயக்குநர்கள் போலி நிறுவன வங்கி கணக்கில் டெபாசிட் செய்த பணத்தை வேறு வங்கி கணக்கிற்கு மாற்றினால் 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தது. அடுத்த கட்ட நடவடிக்கையாக, நிதி பரிவர்த்தனை முறைகேடுகள் தொடர்பாக 1,06,578 இயக்குநர்களை தகுதி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பிற நிறுவனங்களில் பணிபுரியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேக பட்டியலில் சுமார் 3 லட்சம் போலி நிறுவன இயக்குநர்கள் உள்ளனர். இவர்கள் மீது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share This: