மழையால் சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்கிறது

கோவை: கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெய்து வரும் மழையால், சின்ன வெங்காயம் போதிய வளர்ச்சி இல்லாமலே அழுகிய நிலையில் அறுவடையாகி வருகிறது. இதனால் இதன் விலை உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் சின்ன வெங்காயம் கடந்த ஜூலை மாதத்தில் கிலோ 90 வரை விற்றது. பின்னர் கடந்த மாதம் துவக்கத்தில் முதல் ரகம் 60க்கும், இரண்டாம் ரகம் 50க்கும் குறைந்தது. பின்னர் கடந்த மாத இறுதியில் மீண்டும் முதல் ரகம் 85க்கும், இரண்டாம் ரகம் 75க்கும் விற்கப்பட்டது. இதே விலை கடந்த 10 நாட்களாக நீடிக்கிறது. இதற்கிடையில் கடந்த 10 நாட்களாக கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், சின்ன வெங்காயம் நிலத்திலேயே முழு வளர்ச்சி பெறுவதற்கு முன்பே அழுகி வருகிறது. இதனால் அவற்றை விவசாயிகள் பறித்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். அவை இரண்டாம் மற்றும் மூன்றாம் தர  நிலையில் தரம் குறைவாக இருந்தாலும், விலை குறையாமல் அதே நிலையில் நீடிக்கிறது. வரும் நாட்களில் மழை குறைந்து, வெயில் அடித்தாலும், அறுவடை செய்ய வெங்காயம் இல்லாததால், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து மட்டும் சின்னவெங்காயம் வரத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதால், விலை மேலும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share This: