ஞாயிறு, 24 செப்டம்பர் 2017
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் சபாநாயகர் முன் இன்று ஆஜராவார்களா?: அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசனையால் பரபரப்பு

Published on : 2017-09-14 00:58:00 |Added on : 2017-09-13 15:18:23 | 1 views


சென்னை: டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் கடந்த மாதம் 22ம் தேதி தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். அதில் முதல்வர் எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக தெரிவித்திருந்தனர். இதையடுத்து அந்த 19  எம்எல்ஏக்களுக்கும் கடந்த 24ம் தேதி சபாநாயகர் தனபால் ஒரு நோட்டீஸ் அனுப்பினார். அதில், உங்கள் மீது ஏன் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டதுடன் நேரில் வந்து விளக்கம் அளிக்க  கூறியிருந்தார். வரும் 14ம் தேதிக்குள் (இன்று) நேரில் வந்து விளக்கம் அளிக்கவும் உத்தர விட்டிருந்தார். இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர். சபாநாயகர் விதித்த கெடு நேற்றுடன் முடிந்தது. இன்று 19 எம்எல்ஏக்களும் நேரில் வந்து சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதற்கிடையில் டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளரான வெற்றிவேல் எம்எல்ஏ நேற்று காலை 11.30 மணிக்கு தலைமை செயலகம் வந்தார். அங்கு சபாநாயகர் தனபாலை சந்தித்து சுமார் 15 நிமிடம் பேசினார். பின்னர் வெளியே வந்த வெற்றிவேல் நிருபர்கள் யாரையும் சந்திக்காமல் சென்றுவிட்டார். இன்று டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியிருப்பதால் அது சம்பந்தமாக சபாநாயகரிடம் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜயநாராயண் நேற்று மதியம் தலைமை செயலகம் வந்து சபாநாயகர் தனபாலுடன் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தி விட்டு சென்றார். இந்த சந்திப்பு குறித்து தலைமை செயலக உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நேரில் விளக்கம் அளிக்க மேலும் காலஅவகாசம் வேண்டும் என்று சபாநாயகரை சந்தித்து வெற்றிவேல் எம்எல்ஏ ேகாரிக்கை வைத்தார். ஆனால் சபாநாயகர் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார். கண்டிப்பாக இன்று நேரில் ஆஜராக வேண்டும், இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார். இந்த எம்எல்ஏக்கள் அனைவரும் தற்போது கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ளதால் இன்று ஆஜராக முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுடன் சபாநாயகர் தனபால் ஆலோசனை நடத்தினார். அப்போது டி.டி.வி.ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று ஆஜராகவில்லை என்றால் அவர்கள் மீது தகுதி நீக்கம் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது” என்றார்.

மேலும் படிக்க »advertising

Copyright © 2008 - 2017 tamilsites.com  - all rights reserved