ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காததால் தீக்குளித்த ஊழியர்

ஊட்டி: ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலக ஊழியர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். ஊட்டியில் உள்ள மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வாகன கிளீனராக பணியாற்றி வருபவர் சபரீசன் (27). இவர், 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் ஒருவர் 2 நாட்களுக்கு முன் இறந்தார். இதற்காக விடுமுறையில் சென்ற அவர், நேற்று மீண்டும் பணிக்கு வந்துள்ளார். மன அழுத்தத்துடன் காணப்பட்ட சபரீசன், தனது உடல் நிலை சரியில்லை என்றுகூறி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு, அங்கிருந்த அதிகாரி ஒருவர் ‘உனது விடுப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது. விடுப்பில் செல்ல முடியாது. அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு, மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வா’ என கூறியுள்ளார். விடுப்பு கிடைக்காததால், அலுவலகத்திற்கு வெளியில் வந்து தன் மீது பெட்ரோலை  ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதனை கண்ட மற்ற ஊழியர்கள் தீயை அணைத்து மீட்டனர். ஆனாலும், சபரீசனுக்கு காலில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, அவரை ஊட்டி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விசாரணை மேற்கொண்டார். மேலும், போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்ைப ஏற்படுத்தியது.

Share This: