சென்னை விமான நிலைய ஊழியர் திடீர் மரணம்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலைய மின் சாதன பராமரிப்பு பிரிவில் ஊழியராக பணியாற்றி வந்தவர் குமரவேல் (38). நேற்று காலை வழக்கம்போல், பணிக்கு வந்த இவர், காலை 11.30 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தும் பகுதியான எண் 30 அருகில் நின்று அங்குள்ள மின்சாதனங்களில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.திடீரென சக ஊழியர்களிடம், ‘எனக்கு நெஞ்சு வலிக்கிறது’  என்று கூறி நெஞ்சை பிடித்துக்கொண்டு அந்த இடத்திலேயே தரையில் அமர்ந்தார். அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் விமான நிலைய மருத்துவ குழுவினருக்கு அவசர தகவல் கொடுத்தனர்.  மருத்துவ குழுவினர் வருவதற்குள் குமரவேல் மயங்கி கீழே சாய்ந்தார். மருத்துவ குழுவினர் பரிசோதித்துவிட்டு, கடுமையான மாரடைப்பால் குமரவேல் உயிரிழந்திருக்கிறார்  என தெரிவித்தனர்.பிறகு விமான நிலைய போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share This: