போராட்டம் எதிரொலி அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை: தமிழக அரசு அவசர உத்தரவு

நெல்லை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலியாக அவர்கள்  விடுப்பு எடுக்க தடை விதித்து தமிழக அரசு நேற்று அவசர உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டார். அதை பொருட்படுத்தாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ேநற்று 5ம் நாளாக அரசு ஊழியர்களின் ேவலைநிறுத்தம் தொடர்ந்ததால் அத்யாவசிய பணிகள் அனைத்தும் ஸ்தம்பித்தன. இந்நிலையில் தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வேலைநிறுத்தம் காரணமாக அரசு ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கக் கூடாது. அவர்கள் பணிக்கு வராதது சட்ட விரோதமானது என ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது.அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சாதாரண விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட எந்த விடுப்புகளும் அனுமதிக்கக் கூடாது. மருத்துவ விடுப்பு தவிர எந்த விடுப்பும் எடுக்க அனுமதி கிடையாது. அரசு ஊழியர்கள் மருத்துவ விடுப்பு கோரினால் அவர்களது மருத்துவ சான்றின் உண்மைத் தன்மையை அறிய உரிய மருத்துவ குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டும். மருத்துவ சான்றின் உண்மையை அறிவதற்கு முன்பு மருத்துவ விடுப்பு வழங்கக் கூடாது. அரசு ஊழியர் மருத்துவ விடுப்பு கோரி அளித்த சான்று உண்மையிலேயே மருத்துவம் சார்ந்தது இல்லை என தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அவசரமாக அனுப்பப்பட்டுள்ளது.

Share This: